< Back
மாநில செய்திகள்
85 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விருதுநகர்
மாநில செய்திகள்

85 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தினத்தந்தி
|
3 Oct 2023 2:16 AM IST

காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 85 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழி செல்வி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழி செல்வி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று விருதுநகர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள் சட்டப்படி தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். மேற்படி தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலை அளிப்பவரால் இரட்டிப்புசம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

இந்தநிலையில் சட்ட விதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அனுமதித்த 46 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், 39 உணவு நிறுவனங்கள் ஆக மொத்தம் 85 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள் சட்டத்தின்படியும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டத்தின் படியும் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்புச்சம்பளம் அல்லது 3 நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்க வேண்டும். இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது சம்பள பட்டுவாடா சட்டத்தின் கீழ் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்