விருதுநகர்
புறக்காவல் நிலையங்கள் முறையாக செயல்பட நடவடிக்கை
|மாவட்டம் முழுவதும் உள்ள புறக்காவல் நிலையங்கள் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள புறக்காவல் நிலையங்கள் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புறக்காவல் நிலையங்கள்
மாவட்டம் முழுவதும் 56 போலீஸ்நிலையங்கள் செயல்பட்டு வந்தாலும் குற்ற செயல்களை தடுக்கவும், தவிர்க்கவும் வாகன விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கவும், முக்கிய பகுதிகளிலும், நெடுஞ்சாலைகளிலும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் புறக்காவல் நிலையங்களை அமைத்துள்ளது.
இந்த புறக்காவல் நிலையங்களில் பணி அமர்த்தப்படும் போலீசார் முறையாக கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பதே மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பாக இருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு புறக்காவல் நிலையங்கள் செயல்பட்டால் தான் அவை அமைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறுவதுடன் பொது மக்களுக்கும் பலன் ஏற்படும் நிலை உருவாகும்.
கேள்விக்குறி
ஆனால் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையங்கள் செயல்படாமல் முடங்கி உள்ளன. இங்கு போலீசார் பணியமர்த்தப்படுவதில்லை.
விருதுநகர் வடபகுதியிலும், கிழக்குப்பகுதியிலும் உள்ள புறக்காவல் நிலையங்களின் செயல்பாடு கேள்விக்குறியாகவே உள்ளது. விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் செயல்பட்டாலும் அதன் கண்காணிப்பு பணி கேள்விக்குறியாக உள்ளது. இதனால் பஸ் நிலையத்தில் குற்ற செயல்களை தவிர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியிலும் புறக்காவல் நிலையத்தின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
வலியுறுத்தல்
எனவே போலீஸ் நிர்வாகம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள புறக்காவல் நிலையங்கள் அவை அமைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் வகையில் முறையாக செயல்படவும் அவை அமைந்துள்ள பகுதியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரிகள் அவற்றை முறையாக கண்காணிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதன் மூலமே புறக்காவல் நிலையங்களின் பணி பொதுமக்கள் நலன்காப்பதாக அமையும்.