செங்கல்பட்டு
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை செய்யும் நிறுவனங்கள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
|மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை செய்யும் நிறுவனங்கள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்படுதல் வேண்டும்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பதாக பல இல்லங்களை தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளோ அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளோ பராமரிக்கப்பட்டு வருகிற அத்தகைய இல்லங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016-ன் கீழ் பதிவு செய்யவேண்டும்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வகையான உதவிகளை வழங்கி அவர்களுக்கு சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிகளை நடத்தி வரும் நிறுவனங்களும், சிறப்புபள்ளிகளும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016-இன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது கட்டாயமாகும்.
நடவடிக்கை
அவ்வாறு இதுவரை பதிவு செய்யாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி அதற்கான விண்ணப்பங்களை பெறலாம். மேலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சேவைகளை செய்துவரும் பதிவு செய்யப்பட்டாத நிறுவனங்கள், இல்லங்கள், சிறப்பு பள்ளிகள் மீது மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016-இன் படி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.