< Back
மாநில செய்திகள்
கடனுதவிகளை முழுமையாக வழங்க நடவடிக்கை
விருதுநகர்
மாநில செய்திகள்

கடனுதவிகளை முழுமையாக வழங்க நடவடிக்கை

தினத்தந்தி
|
14 Dec 2022 12:48 AM IST

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிகளை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கியாளர்களுக்கு கலெக்டர் மேகநாத ரெட்டி அறிவுறுத்தினார்.


மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிகளை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கியாளர்களுக்கு கலெக்டர் மேகநாத ரெட்டி அறிவுறுத்தினார்.

பயிற்சி பட்டறை

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான பயிற்சி பட்டறையில் மகளிர் சுய உதவி குழுக்கள் முன்னேற்றத்தில் வங்கிகளின் பங்கு குறித்தும், வங்கிகளின் நிலையான வட்டி வருமானம் மற்றும் முறையான கடனை செலுத்துவதால் வட்டி மானியம் பெறுவதில் உள்ள தடைகளை அகற்றுவது பற்றியும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவதற்கான பதிவு குறித்தும் வங்கியாளர்களுடன் விவாதிக்கப்பட்டது.

அப்போது கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் 2021 -2022-ம் நிதியாண்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 528 கோடி கடனுதவி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை விட அதிகமாக ரூ.598.38 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளன.

பொருளாதார மேம்பாடு

2022-2023-ம் நிதியாண்டில் ரூ.650 கோடி நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை ரூ.351.97 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கடன் தொகையை குறிப்பிட்ட காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டம் அதிக தொழில்களை நம்பி இருக்கக்கூடிய மாவட்டமாக இருந்து வரும் நிலையில் வங்கியாளர்கள் தகுதியான மகளிர் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கி அவர்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிகளுக்கு பரிசு

இதையடுத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிக கடன் உதவி வழங்கிய 18 வங்கிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

இதில் வாழ்வாதார திட்ட இயக்குனர் தேவேந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் ராஜலட்சுமி, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் செந்தில் குமார், முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன், நபார்டு வங்கி மேலாளர் ராஜா சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்