திருவாரூர்
ரூ.4¼ லட்சம் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை
|மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.4¼ லட்சம் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேணடும் என போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 4 பேர் மனு அளித்தனர்.
மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.4¼ லட்சம் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேணடும் என போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 4 பேர் மனு அளித்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கொட்டையூர் சர்வமாணியம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 32). அதே ஊரை சேர்ந்தவர் ராஜ்குமார் (40). கொரடாச்சேரி அய்யம்பேட்டையை சேர்ந்தவர் லெட்சுமணன் (49), கொரடாச்சேரி வெள்ளமதகு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர்கள் 4 பேரும் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பணம் கொடுத்தோம்
எங்கள் 4 பேரையும் மலேசியாவில் வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி கொரடாச்சேரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் பணம் கேட்டார். இதனால் அந்த பெண்ணிடம், முரளி ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், ராஜ்குமார் ரூ.1 லட்சமும், லெட்சுமணன் ரூ.80 ஆயிரமும், ரமேஷ் ரூ.90 ஆயிரமும் என ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்தை கொடுத்தோம்.
இதில் முரளி, ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் மலேசியாவில் வேலைக்கான டிக்கெட், விசாவை வழங்கினார். அவர்கள் இருவரும் மலேசியா நாட்டிற்கு சென்றபோது, அங்கு சோதனை செய்த அதிகாரிகள் விசா போலியானது என கூறி கைது செய்து சிறையில் அடைத்து, பின்னர் விடுவித்ததையடுத்து அவர்கள் ஊருக்கு திரும்பினர்.
நடவடிக்கை
இதுபற்றி வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த பெண்ணிடம் கேட்டதற்கு சரிவர பதில் அளிக்கவில்லை.மேலும் லெட்சுமணன், ரமேஷ் இருவரையும் மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்பி வைப்பதற்கான எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்களை மலேசியா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி பணம் மோசடி செய்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.