சிவகங்கை
பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை
|பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்நாள் வரை சுற்றுலாத்துறையில் பதிவு செய்யாமல் பல சுற்றுலா தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக கண்டறியப்படுகிறது.
அதன்படி இதுவரை பதிவு செய்யாத சுற்றுலா நிறுவனங்கள் tntourismtors.com என்ற தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், வழிகாட்டு நெறிமுறைகளை பெறுவதற்கும், கூடுதல் விவரங்களுக்கும், மாவட்ட சுற்றுலா அலுவலர், மாவட்ட சுற்றுலா அலுவலகம், காரைக்குடி என்ற முகவரியிலோ அல்லது touristofficekaraikudi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.