தஞ்சை பெரிய கோவில் விவகாரத்தில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை - இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை
|தஞ்சை பெரிய கோவில் தரைத்தளத்தில் இந்திய தொல்லியல் துறையால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோவிலின் அடித்தளத்தை அசைக்கும் வகையில் தரைத்தளங்களை உடைத்து இந்து சமய அறநிலையத்துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒரு காணொளி காட்சி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இத்திருக்கோவில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் இந்திய தொல்லியல் துறையினரால் மட்டுமே மேற்கொள்ளப்படும். இந்து சமய அறநிலையத்துறையால் தினசரி பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சன்னதியின் பின்புறத்தில் உள்ள தரைத்தளம் மேடு பள்ளங்களுடன் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடப்பதற்கு சிரமமாக உள்ளதால் தரைத்தளத்தில் பராமரிப்பு பணிகள் இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் பெருவுடையார் திருக்கோவிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இத்திருக்கோவிலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இந்திய தொல்லியல் துறையின் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் மீது அவதூறு பரப்பும் வகையில் காணொளி காட்சி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.