ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வக்கீல்கள் மீது நடவடிக்கை
|வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வலியுறுத்த உள்ளோம் என்று பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து மாநில பார் கவுன்சில் பிரதிநிதிகள், வக்கீல் சங்க பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் குழுவை அமைத்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறும்படி பிரதமர், உள்துறை மற்றும் சட்டத்துறை மந்திரிகளை வலியுறுத்தும்படி இந்திய பார் கவுன்சிலை கேட்டுக்கொள்ள உள்ளோம்.
அதன்பிறகும், இந்த புதிய சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும்படி, இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்துவோம். இந்த சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் குழுவை நியமித்த தமிழக அரசின் முடிவுக்கும், சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் வரவேற்கிறோம்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வக்கீல்கள் குறித்து காவல்துறை அறிக்கை கிடைத்ததும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். குற்றப்பின்னணி இல்லாதவர்கள் மட்டுமே பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்யப்படுகின்றனர். குற்ற வழக்குகளில் தொடர்புடைய வக்கீல்களை நிரந்தரமாக நீக்குவது குறித்து கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.