மதுரை
பிடிவாரண்டு உத்தரவை நிறைவேற்றாத போலீசார் மீது நடவடிக்கை
|பிடிவாரண்டு உத்தரவை நிறைவேற்றாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரை,
போதைப்பொருள் தடுப்பு சிறப்பு போலீசாரால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட செல்வம் என்பவர் தனக்கு ஜாமீன் கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அவருக்கு ஜாமீன் அளித்தால் மீண்டும் இதே தவறில் ஈடுபடுவார் என அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் மீது மேலும் சில வழக்குகள் உள்ளன. இவர் கடத்திய போதைப்பொருள் கஞ்சாதான் என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஜாமீனில் வெளியே வந்தால் மீண்டும் இதே குற்றத்தில் ஈடுபடுவார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது. மேலும் அவர் மீதான வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர், மனுதாரர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு கடந்த 2014-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டு அந்த உத்தரவு நிலுவையில் உள்ளது. ஆனால் மனுதாரர் கஞ்சா கடத்தியதாக கடந்த ஆண்டுதான் கைதாகியுள்ளார். இது மிகுந்த அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது. போலீசார் குற்றவாளிகளை தப்பிக்க விடுவதற்கு இந்த சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு. போலீஸ் உயர் அதிகாரிகள், இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு உத்தரவை நிறைவேற்றாமல் 4 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் வைத்துள்ள போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.