விருதுநகர்
விவசாயியை மிதித்த பஞ்சாயத்து செயலர் மீது நடவடிக்கை
|கிராம சபை கூட்டத்தில் விவசாயியை மிதித்த பஞ்சாயத்து செயலாளர் மீது நடவடிக்ைக எடுக்க கோரி கலெக்டரிடம் பாதிக்கப்பட்ட விவசாயி மனு அளித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பிள்ளையார் குளம் ஊராட்சி வேப்பங்குளத்தை சேர்ந்த விவசாயி அம்மையப்பன் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
காந்தி ஜெயந்தியன்று பிள்ளையார் குளம் பஞ்சாயத்து கிராம சபை கூட்டம் நடைபெற்ற போது பஞ்சாயத்து செயலாளர் தங்கப்பாண்டியன் என்னை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்கினார். இது சமூக வலைத்தளங்களில் பரவலாக ெவளியானது. எனவே பஞ்சாயத்து செயலாளர் தங்கப்பாண்டியன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு அவர் முறைகேடு செய்ததையும் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த சம்பவத்தால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு நிவாரணம் வழங்க வேண்டும். வருகிற நவம்பர் 1-ந் தேதி ஊராட்சி தின கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி கொடுத்துள்ள மனுவில் விவசாயியை தாக்கிய பஞ்சாயத்து செயலாளர் தங்கப் பாண்டியன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.