கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை -ஐகோர்ட்டு உத்தரவு
|கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் 2018-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், கரூரில் உள்ள கல்யாண பசுபதீசுவரர் கோவிலுக்கு செந்தமான 10 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. அதில் வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவில் நிலங்களை மீட்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
உறுதிமொழி பத்திரம்
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்கவும், அங்குள்ள வீடுகளில் குடியிருப்பவர்களிடம், இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என கோவில் நிர்வாகத்திடம் உறுதிமொழி பத்திரம் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக பலர், சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, தங்களது கோரிக்கை குறித்து மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து பரிகாரம் தேடலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
இந்தநிலையில் இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
கரூர் கல்யாண பசுபதீசுவரர் கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு, முறையாக நோட்டீஸ் அளிக்க வேண்டும். பின்னர், அவர்களது ஆவணங்களையும் சமர்ப்பிக்க போதிய அவகாசம் கொடுக்க வேண்டும். இதில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்தது உறுதியானால், ஆக்கிரமிப்பை 12 வாரத்தில் அகற்ற வேண்டும்.
கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு பல ஆண்டுகளாக பல்வேறு உத்தரவை பிறப்பிக்கிறது. இதை பின்பற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை உயர் அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.