மதுரை
அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை- கலெக்டருக்கு நீதிபதி உத்தரவு
|பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்
அனைவருக்கும் வீடு திட்டம்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த லட்சுமி என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
மத்திய அரசின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட கடந்த 2018-ம் ஆண்டு விண்ணப்பித்து இருந்தேன். அதில் பயனாளியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், எனது வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்காமல், காலம் கடத்திவந்தனர். இதுசம்பந்தமாக விசாரித்தபோது, எங்களது கிராமத்தை சேர்ந்த எனது பெயரை கொண்ட வேறொரு நபரை இந்த திட்டத்தில் சேர்த்து பணத்தை முறைகேடு செய்துள்ளனர். எனவே எனக்கு இந்த திட்டத்தின்கீழ் வர வேண்டிய பணத்தை வழங்கவும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் புதிதாக விண்ணப்பித்தால் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
அதனை தொடர்ந்து நீதிபதி, "பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் என்பது வீடு இல்லாத ஏழை-எளிய மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் முறைகேடு செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த திட்டம் முறையாக வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தப்பட வேண்டும். சரியான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார். மேலும், "சிவகங்கை மாவட்ட கலெக்டர் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், மனுதாரருக்கு 12 வாரத்திற்குள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய தொகைைய அவரது வங்கிக்கணக்கில் வரவு வைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.