< Back
மாநில செய்திகள்
அனுமதியின்றி செயல்பட்ட  11 மதுபான பார்களுக்கு சீல் வைப்பு
தேனி
மாநில செய்திகள்

அனுமதியின்றி செயல்பட்ட 11 மதுபான பார்களுக்கு 'சீல்' வைப்பு

தினத்தந்தி
|
12 July 2022 7:51 PM IST

தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் அனுமதியின்றி செயல்பட்ட 11 மதுபான பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்


தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகே அனுமதி பெறாமல் மதுபான பார்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்து அரசுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து மதுரை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அருண் சத்யா தலைமையில் 3 குழுக்கள் அமைத்து டாஸ்மாக் அதிகாரிகள் ஆண்டிப்பட்டி, தேனி, கம்பம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தேனியில் 2 டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் அனுமதி பெறாமல் மதுபான பார் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 2 பார்களும் உடனடியாக மூடப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டன. அதுபோல் ஆண்டிப்பட்டி பகுதியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 டாஸ்மாக் கடைகளின் அருகில் அனுமதியின்றி மதுபான பார்கள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அந்த 5 பார்களும் 'சீல்' வைக்கப்பட்டன.

கம்பம் பகுதியில் டாஸ்மாக் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது 4 டாஸ்மாக் கடைகளின் அருகில் அனுமதியின்றி மதுபான பார்கள் செயல்பட்டன. அந்த 4 மதுபான பார்களும் மூடப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டன. மாவட்டத்தில் ஒரே நாளில் அனுமதியின்றி செயல்பட்ட 11 மதுபான பார்கள் அதிரடியாக 'சீல்' வைக்கப்பட்டன. மேலும் அனுமதியின்றி மதுபான பார்கள் நடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்