தேனி
மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
|பக்ரீத் பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்
பக்ரீத் பண்டிகையையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்கள், ஈத்கா மைதானங்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். அதன்படி தேனி அல்லிநகரத்தில் இருந்து தேனி பழைய பள்ளிவாசலுக்கு முஸ்லிம்கள் இன்று காலை ஊர்வலமாக வந்தனர். பின்னர் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அல்லிநகரம் வி.எம்.சாவடியில் இருந்து முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக சென்றனர். பள்ளிவாசல் முன்பு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அதுபோல், தேனி பங்களாமேட்டில் இருந்து புதிய பள்ளிவாசலுக்கு முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர்.
கம்பத்தில், வாவேர் பள்ளிவாசல், புதுப்பள்ளிவாசல், முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், கம்பம்மெட்டு சாலையில் சிறப்பு தொழுகை நடந்தது. போடியில் புதூர் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. மேலும், முஸ்லிம்கள் ஆட்டு இறைச்சியை ஏழை, எளிய மக்களுக்கும், தங்களின் நண்பர்களுக்கும் குர்பானியாக கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.