< Back
மாநில செய்திகள்
கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்; குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்; குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

தினத்தந்தி
|
25 Jun 2022 12:34 AM IST

கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் கூட்டத்தில் கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர்.

பெரம்பலூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள்-கரும்பு வளர்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் பேசுகையில், கரும்பு கொள்முதல் செய்ததற்கான நிலுவை தொகையை விவசாயிகளுக்கு அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். துங்கபுரம் பகுதியில் அதிக மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே கூடுதலாக மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

உரத்தட்டுப்பாடு

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நீலகண்டன் பேசுகையில், மாவட்டத்தில் நெல் அறுவடை முடியும் வரை கொள்முதல் நிலையங்களை செயல்பட அனுமதிக்க வேண்டும். மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் உரத்தட்டுபாடு நிலவுகிறது. அதனை சரி செய்ய வேண்டும், என்றார். விவசாயி ராஜூ பேசுகையில் பயிர்க்கடன், நகைக்கடனை தள்ளுபடி செய்வதில் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் குளறுபடி செய்கின்றனர். கடன் தள்ளுபடியில் அரசின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும், என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லதுரை பேசுகையில், கலெக்டரிடம் கொடுக்கப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா? என்பதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படாததால், அதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க கலெக்டர் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன வெங்காயம் கொட்டகை அமைக்கும் திட்ட பயன்களை கூடுதல் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

கடன் மேளா நடத்த வேண்டும்

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசுகையில், மாணவர்களுக்கு கல்விக்கடன் மேளாவும், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மேளாவும் நடத்த வேண்டும். தனியார் உர விற்பனை நிலையங்கள் செயற்கை உர தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றன. எனவே அந்த விற்பனை நிலையங்களை கண்காணிக்க வேண்டும், என்றார். தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் பேசுகையில், பருத்தி, மக்காச்சோளத்திற்கு தரமான விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவாச்சூர் வாரச்சந்தை தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்