வாலிபருடன் பழக்கம்.. வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி
|மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், திடீரென மாயமானார். அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் சிறுமி நேற்று முன்தினம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். இதுபற்றி போலீசார் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பெற்றோர் விரைந்து வந்து சிறுமியை பார்த்து கட்டிப்பிடித்து கதறி அழுதனர். தொடர்ந்து போலீசார் மாணவியிடம் மாயமானது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது சிறுமிக்கும், இறச்சகுளம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மாணவியை அந்த வாலிபர் ஆசை வார்த்தைகள் கூறி திருநெல்வேலிக்கு கடத்தி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து நண்பர்கள் உதவியுடன் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்தார்.
பின்னர் அந்த வாலிபர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து சிறுமி அந்த வீட்டில் இருந்து தப்பி வந்து ஒரு ஆட்டோ டிரைவரிடம் செல்போனை வாங்கி வாலிபரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போதும் அந்த வாலிபர் சிறுமி இருக்கும் இடத்துக்கு வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிறுமி, போலீஸ் நிலையத்துக்கு வந்து ஆஜரானது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
சிறுமிக்கு 15 வயது என்பதால் அவரை கடத்தி சென்ற வாலிபர் மற்றும் அவருக்கு உதவிய நண்பர்கள் என 5 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே தலைமறைவாக இருக்கும் வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.