அரியலூர்
தங்கம்-2 வெண்கல பதக்கங்கள் வென்று தா.பழூர் மாணவி சாதனை
|தங்கம்-2 வெண்கல பதக்கங்கள் வென்று தா.பழூர் மாணவி சாதனை படைத்தார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் ஊராட்சியை சேர்ந்த தினக்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமு-லட்சுமி தம்பதி. ராமு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கபிலன் என்ற மகனும், லக்ஷனாதேவி என்ற மகளும் உள்ளனர். இதில் லக்ஷனாதேவி அணைக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 'ஸ்கொய்' என்று அழைக்கப்படும் உரைவாள் சண்டை கலையையும் பயின்று வந்தார்.
இதையடுத்து கடந்த மாதம் 3-ந் தேதி கும்பகோணத்தில் மாநில அளவில் நடைபெற்ற பெடரேஷன் போட்டிகளில் வெற்றி பெற்றார். இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான பெடரேஷன் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்ற லக்ஷனாதேவி, அங்கு செல்வதற்கு வசதி இல்லாததால் அவர் போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியானது. இதையடுத்து கடந்த 23-ந் தேதி மாணவியின் சாதனை குறித்தும், அவருக்கு ஜம்மு காஷ்மீர் செல்ல வசதி இல்லாதது குறித்தும் 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து சில தன்னார்வலர்கள் அவருக்கு நிதி உதவி செய்தனர். இதையடுத்து லக்ஷனாதேவி ஜம்மு காஷ்மீர் சென்று தேசிய அளவிலான பெடரேஷன் போட்டிகளில் கலந்து கொண்டார். கடந்த 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்ட அவர், அதில் ஏரோ ஸ்கொய் என்ற வகையிலான போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் லோபோ வாள் சண்டையில் வெண்கல பதக்கமும், அவான் கே சங்கராய் என்ற வகை போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றார். மேலும் சர்வதேச போட்டிக்கு லக்ஷனாதேவி தகுதி பெற்றார்.
சர்வதேச போட்டியில் கலந்து கொண்டால் இந்தியாவுக்காக பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடி தருவேன் என்று லக்ஷனாதேவி கூறினார். மேலும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தனக்கு உதவி செய்த தன்னார்வலர்களுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.