விருதுநகர்
மருத்துவக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க நடவடிக்கை
|அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 3 மருத்துவக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் வலியுறுத்தினார்.
அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 3 மருத்துவக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் வலியுறுத்தினார்.
அங்கீகாரம் ரத்து
விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:-
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது தான் ஒரே நேரத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மருத்துவக்கல்லூரிகளில் முறையாக தேவைப்படும் வசதிகளை செய்து தராத நிலையில் மத்திய அரசு 3 மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. எனவே உடனடியாக தமிழக அரசு இந்த 3 மருத்துவக்கல்லூரிகளிலும் தேவையான வசதிகளை செய்து தந்து அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுப்பதுடன் மத்திய அரசும் அதனை மறு ஆய்வு செய்து இந்த கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டியது அவசியமாகும்.
அதிகாரிகள் மீது தாக்குதல்
அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்ற போது ஒரு பெண் அதிகாரி உள்பட வருமான வரி துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து தி.மு.க. தரப்பில் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு சென்றிருக்க வேண்டும் என்று சொல்வது ஏற்புடையதல்ல. எந்த மாநிலத்திலும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு வருமான வரித்துறையினர் சோதனைக்கு செல்வதில்லை. வேறு எங்கும் இம்மாதிரியான சம்பவம் நடந்ததும் இல்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாட்சி
இதற்கு தேவையான சான்றுகளை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். மேலும் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள வருமானவரித்துறை அதிகாரிகளே இதற்கு சாட்சியாகும். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விருதுநகர் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமை அவர் தொடங்கி வைத்தார்.