< Back
மாநில செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி: ரூ.95 லட்சத்தில் பொய்கை குளத்தை தூர்வாரி நடைபாதையுடன் கூடிய புல்வெளிகள் அமைப்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி: ரூ.95 லட்சத்தில் பொய்கை குளத்தை தூர்வாரி நடைபாதையுடன் கூடிய புல்வெளிகள் அமைப்பு

தினத்தந்தி
|
23 Jun 2022 2:46 PM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி ரூ.95 லட்சத்தில் வடக்கு மாமல்லபுரம் பொய்கை குளத்தை தூர்வாரி, நடைபாதையுடன் கூடிய புல்வெளிகள் அமைத்து அழகுபடுத்தும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை மாதம் 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்காக மாமல்லபுரம் நகரத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த நகரை சர்வதேச தரத்திற்கு அழகுபடுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கான பணிகள் நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் முன்னிலையில் தொடங்கப்பட்டது.

முதல் கட்ட பணியாக பழமை வாய்ந்த வடக்கு மாமல்லபுரம் பகுதியில் உள்ள பொய்கை குளத்தை ரூ.95 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. இ்ந்த குளத்தை தூர் வாரிய பிறகு இந்த குளத்தை சுற்றி நடைபாதையுன் கூடிய புல்வெளிகள் அமைத்தல், குளத்து நீர் வெளியேறாத வகையில் 2 இடங்களில் மதகுகள் அமைத்தல், பசுமையை பாதுகாக்கும் வகையில் இந்த குளத்தை சுற்றி மரக்கன்றுகள் நடுதல், இரவை பகலாக்கும் வகையில் குளத்தை சுற்றி வண்ண விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு புத்தம் பொலிவுடன் உள்ளூா் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த குளம் சீரமைக்கப்படுகிறது.

பூமி பூஜை தொடக்க விழாவுக்கு வருகை தந்த பொதுமக்கள் சிலர், இந்த குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் கூறும்போது:-

இந்த குளத்தின் ஊற்று பகுதி மிகவும் நீர்சுரப்பு வாய்ந்த பகுதியாகும். ஊற்று பகுதி பாதிக்காத வகையில் நடைபாதை, சாலை பகுதிகளை அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

அதற்கு அதிகாரிகள் ஊற்று பகுதியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், பேரூராட்சி துணைத்தலைவர் ஜி.ராகவன், தமிழ்மாநில காங்கிரஸ் நகர தலைவர் பாலுசாமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜீவிதாஸ்ரீதர், கஜலட்சுமி கண்ணதாசன், மோகன்குமார், லதாகுப்புசாமி, வள்ளிராமச்சந்திரன், மல்லை நீர்நிலைகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் சிறுத்தை வீ.கிட்டு மற்றும் பொதுப்பணித்துறை, பேரூராட்சி துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்