திருப்பூர்
லாரி- மோட்டார்சைக்கிள் மோதல்; விவசாயி பரிதாப சாவு
|காங்கயம் அருகே லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள கத்தாங்கண்ணி, வயக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது45). திருமணம் ஆகாத இவர் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை தொட்டிய பாளையம் நால்ரோட்டில் இருந்து சென்னிமலை நால்ரோடு சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
லாரி ேமாதி சாவு
அப்போது வயக்காட்டு புதூர் அருகே உள்ள தனியார் பிளீச்சிங் கம்பெனி அருகில் வந்தபோது, எதிர் திசையில் வந்த டிப்பர் லாரி சந்திரசேகர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் சந்திரசேகர் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் அடைந்தார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக சந்திரசேகரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சந்திரசேகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.