பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
|பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பதை தொழிலகப் பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது ஆராய வேண்டும்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள், கள்ளச்சாராயத்தினால் உயிரிழப்புகள், பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலைகள், கால்நடைகளால் உயிரிழப்புகள், சமூக விரோதிகளால் உயிரிழப்புகள், ஆணவக் கொலைகளால் உயிரிழப்புகள், சிலிண்டர் வெடிப்பு காரணமாக உயிரிழப்புகள் என மனித உயிரிழப்புகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்று வருகின்றன. இதுதான் தி.மு.க. அரசின் மூன்றாண்டு சாதனை. பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்து என்பது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த வெடி விபத்துகள் எல்லாம் இரசாயனக் கலவையின்போது ஏற்படுகின்றன. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பட்டாசு தொழிற்சாலைகளிலும், இரசாயனக் கலவைகள் மேற்கொள்ளும் இடத்தில் தகுதி வாய்ந்தோர் இருக்கிறார்களா? பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பதையெல்லாம் தொழிலகப் பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது ஆராய வேண்டும்.
ஆனால், இது போன்ற ஆய்வுகள் அவ்வப்போது நடைபெறுவதில்லை என்றும், போதுமான அதிகாரிகள் இல்லை என்றும் தகவல்கள் வருகின்றன. இது குறித்து நானும் பல அறிக்கைகள் மூலமாக தி.மு.க. அரசை வலியுறுத்தி வருகிறேன். இருப்பினும், எந்த ஆய்வுகளும் முறையாக நடைபெறாததன் காரணமாக, இதுபோன்ற விபத்து அடிக்கடி நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. தி.மு.க. அரசின் அக்கறையின்மைதான் இவ்வாறு நடைபெறும் விபத்துகளுக்கு காரணம்.
தி.மு.க. அரசின் அக்கறையின்மை காரணமாக, இன்று காலை விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பந்துவார்பட்டி பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருமே தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவர்கள். குறைந்த ஊதியத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பினை வழங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கிவிட்டு, தொடர்ந்து இதுபோன்ற விபத்துகளை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது என்பது கடும் கண்டனத்திற்குரியது.
பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினை முதல்-அமைச்சர் அவர்கள் எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு, உயிரைப் பணயம் வைத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது