சென்னை
விபத்தால் மூளைச்சாவு: வேலூர் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
|விபத்தால் மூளைச்சாவு அடைந்த வேலூர் பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. அவரது உடலுக்கு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நூதன முறையில் பிரியாவிடை கொடு்த்து மரியாதை செலுத்தினர்.
சென்னை,
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 36 வயது பெண் கடந்த 27-ந்தேதி வேலூரில் தனது கனவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் நேற்று மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து அந்த பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய உறவினர்கள் முன்வந்தனர். அவருடைய உடல் உறுப்புகள் பிரித்து எடுக்கப்பட்டு, தானமாக வழங்கப்பட்டன.
கல்லீரல் மற்றும் 2 சிறுநீரகம், 2 கண்கள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர். ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு, அந்த பெண்ணின் கல்லீரல் பொருத்தப்படுகிறது.
தான் இறந்தாலும், தன்னுடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்கி மறுவாழ்வு கொடுத்த அந்த பெண்ணை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் கவுரவிக்க விரும்பினர்.
அதன்படி, அந்த பெண்ணின் உடல் வார்டில் இருந்து பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு பேட்டரி காரில் எடுத்து செல்லப்பட்டது.
அப்போது டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இரு புறங்களிலும் நின்றுகொண்டு இருகரங்களையும் கூப்பி வணங்கியவாறு அஞ்சலி செலுத்தினர். இது அனைவரையும் கண்கலங்க வைப்பதாக இருந்தது. இந்த ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு தானம் செய்துவிட்டு, மரணம் அடைந்த ஒருவருக்கு மரியாதை செலுத்துவது இதுவே முதல் முறை ஆகும்.
இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் தேரணிராஜன் கூறுகையில், 'உடல் உறுப்புதானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்களது நோக்கம்' என்று தெரிவித்தார்.