< Back
மாநில செய்திகள்
குளச்சல் அருகேமோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற போது விபத்து; மாணவி பலிவாலிபர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குளச்சல் அருகேமோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற போது விபத்து; மாணவி பலிவாலிபர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி

தினத்தந்தி
|
3 May 2023 11:52 PM IST

குளச்சல் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற போது விபத்து ஏற்பட்டு மாணவி பரிதாபமாக இறந்தார். வாலிபர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குளச்சல்:

குளச்சல் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற போது விபத்து ஏற்பட்டு மாணவி பரிதாபமாக இறந்தார். வாலிபர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவி

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி தருவையை சேர்ந்தவர் லாசர் மணி. இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் 2 மகள்களும் இருந்தனர். லாசர் மணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து தமிழரசி தனது 2 மகள்களுடன் சக்கப்பற்றில் உள்ள ஒரு உறவினரின் பராமரிப்பில் வசித்தார்.

இவர்களில் மூத்த மகள் அபர்ணா (வயது 16). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். இதற்கிடையே இவருக்கும் குளச்சல் களிமாரை சேர்ந்த விஜூ (19) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அபர்ணாவின் வீட்டினர் கண்டித்தனர்.

கடத்தல்; விபத்து

இந்தநிலையில் கடந்த 1-ந்் தேதி அபர்ணா வீட்டில் தனிமையில் இருந்த போது விஜூ அவரை பார்க்க சென்றார். அப்போது மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்றார்.

இருவரும் மண்டைக்காடு அருகே வெட்டுமடை பகுதியில் வந்த போது எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அபர்ணாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கவனித்த அந்த பகுதியில் நின்றவர்கள் இருவரையும் மீட்டு உடையார்விளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அபர்ணா ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பரிதாப சாவு

ஆனால் சிகிச்சை பலனின்றி அபர்ணா நேற்று பரிதாபமாக இறந்தார். விஜூவுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் உறவினர் மதியழகன் குளச்சல் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் விஜூ மீது கடத்தல் மற்றும் போக்சோ பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த மாணவி இறந்ததால் விஜூ மீது 304 (ஏ) (விபத்தில் மரணம்) பிரிவின் கீழ் குளச்சல் போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாணவியை கடத்திச் சென்ற போது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்