சேலம்
புறாவை பிடிக்க சென்ற வாலிபர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு...!
|ஆத்தூர் அருகே புறாவை பிடிக்க சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்து உள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் மனோஜ் குமார் (வயது 19). இவர் ஆத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் மனோஜ்குமார் தனது பாட்டி வீடான காட்டுக்கோட்டை கிராமத்திற்கு நேற்று சென்றுள்ளார். இன்று காலை காட்டு கோட்டையில் இருந்து பெரியார் நகர் செல்லும் வழியில் ராசாத்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புறா இருப்பதை கண்டு அதனை பிடிக்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றின் உள்ளே இறங்கி மனோஜ் குமாரை மீட்டனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.