கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி மற்றொருவர் படுகாயம்
|தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
வாலிபர்கள்
கிருஷ்ணகிரி அருகே இட்டிக்கல் அகரம் அடுத்த தவளம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர்.
இவருடைய மகன் ஆனஸ்ட்ராஜ் (வயது 20). கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் பிரசாந்த் (21). இவர்கள் இருவரும் தேன்கனிக்கோட்டை பகுதியில் தங்கியிருந்து வீடுகளுக்கு எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
விசாரணை
மோட்டார் சைக்கிளை பிரசாந்த் ஓட்டினார். ஆனஸ்ட்ராஜ் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக தண்ணீர் ஏற்றி சென்ற டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பின்னால் அமர்ந்திருந்த ஆனஸ்ட்ராஜ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஇறந்தார்.
மேலும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பிரசாந்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.