ஈரோடு
திம்பம் மலைப்பாதையில் விபத்து அந்தரத்தில் தொங்கிய மினி லாரி
|திம்பம் மலைப்பாதையில் விபத்து அந்தரத்தில் மினி லாரி தொங்கியது.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. குறுகலான 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கனரக வாகனங்கள் செல்லும் போது குறுகலான வளைவுகளில் திரும்ப முடியாமல் பழுதாகி நிற்பதும், கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய மினி லாரி ஒன்று தனியார் சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை தாளவாடியை சேர்ந்த ஆறுமுகசாமி ஓட்டினார். திம்பம் மலைப்பாதையின் 20-வது கொண்டை ஊசி வளைவு அருேக சென்றபோது, கரும்பு பாரம் ஏற்றிய மற்றொரு லாரி ஒன்று மினி லாரி மீது மோதியது. இந்த விபத்தில் மினி லாரி மலைப்பாதையின் ஓரத்துக்கு சென்று தடுப்புச்சுவரை இடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கியது. இந்த விபத்தில் மினி லாரியை ஓட்டி வந்த ஆறுமுகசாமி காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.