ஈரோடு
கோபி அருகே விபத்து: மூதாட்டி பலி; பெண் காயம்
|கோபி அருகே விபத்தில் மூதாட்டி பலியானாா். பெண் காயம் அடைந்தாா்.
கடத்தூர்
கோபி அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் நடராஜ். இவருடைய மனைவி அங்கம்மாள் (வயது 68). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அங்கம்மாள் கோபி கணபதிபாளையம் பிரிவு அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் அங்கம்மாள் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
விபத்துக்கு காரணமான மோட்டார்சைக்கிளை கோபி கிரே நகரை சேர்ந்த மனோஜ்குமார் (28) என்பவர் ஓட்டிவந்தார். ரோகினி (28) என்பவர் பின்னால் உட்கார்ந்து வந்தார். இந்த விபத்தில் ரோகினிக்கும் காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு, ஆம்புலன்சில் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே அங்கம்மாள் இறந்துவிட்டார். ரோகினி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.