< Back
மாநில செய்திகள்
விபத்து காப்பீடு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

விபத்து காப்பீடு

தினத்தந்தி
|
4 Sept 2022 1:40 AM IST

தபால்துறை மூலம் ரூ.10 லட்சத்துக்கு விபத்து காப்பீடு

அஞ்சல் துறை நெல்லை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் ஆண்டுக்கு ரூ.399 செலுத்தினால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 16 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீடு திட்டத்தில் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாளம், முகவரி சான்றிதழ் நகல்கள் போன்ற எந்தவிதமான காகித பயன்பாடும் இல்லாமல் தபால்காரர்கள் கொண்டு வரும் ஸ்மார்ட்போன் விரல் ரேகை மூலம் பாலிசி டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகிறது.

விபத்தில் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் போன்றவற்றுக்கு ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது. விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவாக உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையிலும், புற நோயாளிகள் செலவுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரையிலும் வழங்கப்படுகிறது.

விபத்தில் பாதிக்கப்பட்டவரின் குழந்தைகளின் கல்விச்செலவுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. விபத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படியாக ஒரு நாளைக்கு ரூ.1,000 வீதம் 10 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க வரும் குடும்பத்தினரின் பயணச்செலவுக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. விபத்தில் இறந்தவரின் ஈமகிரியை செய்ய ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சல் நிலையம் மற்றும் தபால்காரர்கள் மூலம் இந்த காப்பீடு திட்டத்தில் இணையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்