திருப்பூர்
பராமரிப்பில்லாமல் இயக்கப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
|மடத்துக்குளம் பகுதியில் பராமரிப்பில்லாத நிலையில் ஆபத்தான முறையில் இயக்கப்படும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சாலை விபத்துகள்
பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு காரணமாக மோசமான சாலைகள், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் போன்றவை உள்ளது. அதுமட்டுமல்லாமல் முறையான பராமரிப்பில்லாத வாகனங்களும் பல விபத்துக்களுக்கு காரணமாகிறது. மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் விபத்துக்கள் ஏற்படுத்தும் நிலையில் பல வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரங்களில் ஏராளமான விவசாய கிராமங்களை உள்ளடக்கியதாக இந்த தாலுகா தலைமையகம் அமைந்துள்ளது. இதனால் தினசரி வாகனப் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இந்தநிலையில் பல வாகனங்கள் முறையான பராமரிப்பில்லாமல் இயக்கப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தகுதிச் சான்று
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
சாலையில் இயக்கப்படும் வாகனங்களை உரிய நேரத்தில் பராமரித்து தகுதிச் சான்று பெற வேண்டியது அவசியமாகும். ஆனால் மடத்துக்குளம் பகுதியில் பல கனரக வாகனங்கள் தகுதிச் சான்று இல்லாமலேயே இயக்கப்படுவதாக தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் வெடித்து விடும் மோசமான நிலையில் உள்ள டயர்கள், ஆங்காங்கே உடைந்துள்ள உதிரி பாகங்கள் என மிக மோசமான நிலையில் இந்த வாகனங்கள் உள்ளன. இதுபோன்ற வாகனங்களில் தண்ணீர், மண், ஜல்லி போன்ற அதிக எடை கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்கின்றனர்.
இந்த வாகனங்களில் பிரேக் பிடிக்குமா? என்பதே சந்தேகமாக உள்ளது.எனவே அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, பராமரிப்பில்லாமல், விபத்துக்களை உருவாக்கும் வகையில் இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.மேலும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.