விருதுநகர்
விதிகளை பின்பற்றி விபத்தில்லா பட்டாசு உற்பத்தி
|விதிகளை பின்பற்றி விபத்தில்லா பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் சி.வி. கணேசன், தங்கம் தென்னரசு ஆகியோர் கூறினர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் விற்பனை மையங்களில் பாதுகாப்பு செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், அசோகன், மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் சி.வி.கணேசன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அமைச்சர்கள் கூறியதாவது:- பட்டாசு தொழில் சார்ந்த விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்படுவது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த தொழிலில் செய்யக்கூடாதவைகளை செய்வதும், செய்ய வேண்டியதை பின்பற்றாமல் இருப்பது விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
பட்டாசு தொழிலில் பாதுகாப்பு வழிகாட்டல்களை நிர்வாகத்தினரும், தொழிலாளர்களும் பின்பற்ற தவறும் பட்சத்தில் தான் பட்டாசு விபத்துக்கள் ஏற்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட ஆய்வு குழுக்கள் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு விதிமீறல்கள் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள், சில்லரை விற்பனை கடைகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குத்தகை பட்டாசு தொழிற்சாலைகளை குத்தகைக்கு விடுவது தவிர்க்கப்பட வேண்டியது மட்டுமின்றி இது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். தொழிற்சாலையில் உள்ள கட்டமைப்புக்கு ஏற்றவாறு அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். தகுந்த கட்டமைப்பு இல்லாமல் உற்பத்தி செய்யக்கூடாது. பணி நேரங்களில் தொழிற்சாலைக்கு அருகில் வைத்து வெடி சோதனை செய்யக்கூடாது.
எனவே பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி விபத்தில்லா பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ள ஒத்துழைப்பு நல்க வேண்டும். விதிமுறைகளை மீறும் பட்டாசு உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை முறையாக கண்காணிக்க தவறும் அரசு அலுவலர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர்கள் கூறினர்.
கூட்டத்தில் முன்னதாக பட்டாசு விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வேல்முருகன், தொழிலாளர் நலத்துறை வருவாய்த்துறை, போலீஸ் துறை தீயணைப்பு துறை அலுவலர்கள், பட்டாசு உரிமையாளர்கள், விற்பனையாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.