தஞ்சாவூர்
சரக்கு ஆட்டோ மோதி வாலிபர் சாவு
|சரக்கு ஆட்டோ மோதி வாலிபர் இறந்தார்.
தஞ்சையில் இருந்து மன்னார்குடிக்கு சம்பவத்தன்று தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ் நெய்வாசல் பிள்ளையார் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, அதே சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லேசாக மோதியதாக கூறப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் பஸ் டிரைவரிடம் முறையிட்டு கொண்டிருந்தார். இந்த வேளையில் பஸ்சை விட்டு பயணிகள் சிலர் கீழே இறங்கி, இதனை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் வந்த சரக்கு ஆட்டோ ஒன்று பஸ்சில் இருந்து கீழே இறங்கி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த வாலிபரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அந்த நபர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெய்வாசல் தென்பாதி கிராம நிர்வாக அலுவலர் பூங்குழலி கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ மோதி இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.