நாகப்பட்டினம்
கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; கட்டிட தொழிலாளி பலி
|வேளாங்கண்ணி அருகே காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
வேளாங்கண்ணி அருகே காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
கம்பி பிட்டர்
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே வாழக்கரை ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் நரேந்திரன் (வயது30). கம்பிபிட்டராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அகிலாண்டேஸ்வரி பிரசவத்துக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் நரேந்திரன், அவருடைய தம்பி அமிர்தலிங்கம் மற்றும் அவருடைய சித்தப்பா செந்தில்குமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அகிலாண்டேஸ்வரியை பார்ப்பதற்காக நாகைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். பரவை அருகே சென்றபோது எதிரேவந்த கார் திடீரென நரேந்திரன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
5 பேர் காயம்
இதனால் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் நரேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த செந்தில்குமார் மற்றும் அமிர்தலிங்கத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் காரை ஓட்டி வந்த திருப்பூண்டி அருகே உள்ள காரைநகர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன், காரில் அமர்ந்து வந்த அவருடைய தந்தை இளஞ்செழியன், தாய் ஆறுமுகம் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.