திருப்பூர்
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவர் பலி
|திருப்பூரில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளிக்கூடம் சென்ற மாணவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவன்
திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இந்த தம்பதியின் ஒரே மகன் ரக்சன்பிரணவ் (வயது 17). இவர் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் பள்ளிக்கு செல்ல தினமும் தனது வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் பல்லடம் சாலை வரை சென்று அங்கிருந்து தனியார் பஸ்சில் சென்று வந்தார்.
லாரி மோதி பலி
அந்தவகையில் நேற்று காலை வழக்கம் போல தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட மாணவர் ரக்சன்பிரணவ் செவந்தாம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது அந்தவழியாக விறகு பாரம் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மாணவரின் மோட்டார்சைக்கிளில் மோதியது.
இந்த விபத்தில் மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆபத்தான நிலையில் இருந்த மாணவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தீவிர சிகிச்ைச அளித்தும் பலனின்றி மாணவர் ரக்சன்பிரணவ் பரிதாபமாக இறந்தார். மாணவரின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
லாரி டிரைவரிடம் விசாரணை
இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த நல்லூர் போலீசார் லாரி டிரைவரான திருச்செங்கோட்டை சேர்ந்த புஷ்பராஜை (56) பிடித்து விசாரித்து வருகின்றனர்.
காலை பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற மகன் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பது அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.