< Back
மாநில செய்திகள்
தொப்பூர் கணவாயில்லாரிகள் கவிழ்ந்து விபத்து; டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம்போக்குவரத்து பாதிப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

தொப்பூர் கணவாயில்லாரிகள் கவிழ்ந்து விபத்து; டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம்போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
30 April 2023 12:30 AM IST

நல்லம்பள்ளி:

தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

3 பேர் காயம்

ஆந்திர மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு நெல்பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை தர்மபுரி மாவட்டம் மூலக்காடு பகுதியை சேர்ந்த டிரைவர் வெற்றிவேல் ஓட்டி வந்தார். கிளீனராக அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 28) என்பவர் உடன் வந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று அதிகாலை லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற 2 கார்கள் மற்றும் கட்டை ஏற்றி சென்ற லாரியின் மீது மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த கட்டை பாரம் ஏற்றிய லாரி, நெல் பார லாரி சாலைகளில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஜோடுகுழி பகுதியை சேர்ந்த கட்டை பார லாரி டிரைவர் அன்பழகன் (38) மற்றும் நெல் பார டிரைவர் கிளீனர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் உதவியோடு மீட்பு குழுவினர் விபத்துக்குள்ளான லாரிகள் மற்றும் கார்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே மற்றொரு லாரி, முன்னால் சென்ற காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து நடந்த தொடர் விபத்துக்களால் பெங்களூரு- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்