திண்டுக்கல்
காட்டுப்பன்றி குறுக்கே வந்ததால் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் பலி
|திண்டுக்கல் அருகே காட்டுப்பன்றி குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
தாடிக்கொம்புவை அடுத்த கோட்டூர் ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, கார்த்திகேயன் வேலை முடிந்து திண்டுக்கல்லில் இருந்து கோட்டூர் ஆவாரம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தனது ஊரின் அருகில் அவர் வந்தபோது, குறுக்கே வந்த காட்டுப்பன்றி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பாய்ந்து முட்டியது.
இதில், நிலை தடுமாறிய கார்த்திகேயன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில், படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கார்த்திகேயன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோட்டூர் ஆவாரம்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே காட்டுப்பன்றி தொல்லை அதிகரித்துள்ளது. அவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது மட்டுமின்றி, சாலையில் அடிக்கடி குறுக்கே ஓடி விபத்துகளையும் ஏற்படுத்தி வருகின்றன. எனவே வனத்துறையினர், காட்டுப்பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.