நாமக்கல்
குமாரபாளையம் அருகேமொபட் மீது வாகனம் மோதி யு.கே.ஜி. மாணவன் சாவுதாய், தாத்தா படுகாயம்
|குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே மொபட் மீது வாகனம் மோதி யு.கே.ஜி. மாணவன் இறந்தார். அவருடைய தாய், தாத்தா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
யு.கே.ஜி. மாணவன்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கத்தேரி பிரிவு விஜயா நகர் காலனியை சேர்ந்தவர் நவீன். பந்தல் போடும் தொழிலாளி. இவருடைய மனைவி திவ்யா (வயது 21). இவருடைய அப்பா கோவிந்தன் (61). நவீன்- திவ்யா தம்பதிக்கு பிரகாஷ் கண்ணன் (5) என்ற மகன் உள்ளான். இவன் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கூடத்தில் இருந்து பேரனை அழைத்து கொண்டு கோவிந்தன் மகள் திவ்யாவுடன் ஒரு மொபட்டில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கத்தேரி பிரிவு பைபாசில் சென்றபோது பின்னால் வந்த வாகனம் மொபட் மீது மோதியது.
விசாரணை
இதில் கோவிந்தன் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறிது நேரத்தில் சிறுவன் பிரகாஷ் கண்ணன் பரிதாபமாக இறந்தான். கோவிந்தன் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திவ்யா குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.