< Back
மாநில செய்திகள்
ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் கரும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாநில செய்திகள்

ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் கரும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தினத்தந்தி
|
29 Dec 2022 3:39 AM IST

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசுடன் முழுக் கரும்பும் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். போராட்டமும் நடத்தினார்கள். அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்குவதற்கு முதல்-அமைச்சர் முடிவு செய்தார். அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், ஒரு முழு கரும்பும் சேர்த்து, அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்க உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை வருகிற 2-ந்தேதிக்கு பதிலாக 9-ந்தேதி அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் கொடுக்கும் பணி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 4-ந்தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அது தற்போது மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி டோக்கன் வினியோகம் செய்யும் பணி வருகிற 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்குவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

கரும்பு சாகுபடியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் வைத்த கோரிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.

கரும்பு கொள்முதல் பணியை கூட்டுறவு, வேளாண்மை, உணவுத்துறை ஆகிய 3 துறைகளும் மேற்கொள்ள உள்ளன. மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைத்து இந்த பணி நடைபெறும்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் ஜனவரி 9-ந் தேதி முதலே அனைத்து ரேஷன் கடைகளிலும் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கும்.

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் கரும்பு வழங்குவதன் மூலம் அரசுக்கு கூடுதலாக சுமார் ரூ.71 கோடி செலவு ஏற்படும். தமிழகத்தில் 5 ஆயிரத்து 600 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிரிடப்பட்டு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

இதில் 20 சதவீத கரும்பு அரசுத்துறையால் கொள்முதல் செய்யப்படும்.

எஞ்சியவை பொது சந்தைகளில் விற்பனைக்கு வரும். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய உள்ள கரும்புக்கான விலையை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும்.

இவ்வாறு அமைச்சர்கள் கூறினார்கள்.

கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் முருகானந்தம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர்ஜெ.ராதாகிருஷ்ணன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்