< Back
மாநில செய்திகள்
ஏ.சி. இயங்காததால் தாம்பரம் ரெயிலில் பயணிகளுக்கு வாந்தி, மயக்கம்
மாநில செய்திகள்

ஏ.சி. இயங்காததால் தாம்பரம் ரெயிலில் பயணிகளுக்கு வாந்தி, மயக்கம்

தினத்தந்தி
|
23 Aug 2023 5:58 AM IST

ஏ.சி. இயங்காததால் செங்கோட்டை-தாம்பரம் ரெயிலில் பயணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியதால் அறந்தாங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு வாரத்திற்கு 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து இந்த ரெயில் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு வந்தது. குளிர்சாதன வசதி கொண்ட பி.5 பெட்டியில் ஏ.சி. இயங்கவில்லை.

இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர். அந்த பெட்டியில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில் ஏ.சி. இயங்காதது குறித்து ரெயில்வே நிா்வாகத்திற்கு ஆன்லைனில் புகார் தெரிவித்தனர். ஆனால் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது.

வாக்குவாதம்

இதற்கிடையில் ரெயில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வந்தபோது பயணிகள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ரெயில் அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு இரவு 9.55 மணி அளவில் வந்தது. அப்போது ரெயில் மீண்டும் புறப்பட்ட போது அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை பயணிகள் நிறுத்தினர். இதனால் ரெயில் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து விசாரித்தனர்.

ரெயிலில் பி.5 பெட்டியில் ஏ.சி.யை சரி செய்தபின் வண்டி புறப்பட்டால் போதும், அதுவரை ரெயில் புறப்படக்கூடாது என கூறி அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏ.சி. இயங்காததால் பயணிக்க முடியாமல் வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டினர். இதனால் அறந்தாங்கி ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பயணிகள் கடும் அவதி

இதையடுத்து அந்த பெட்டியில் ஏ.சி.யை தற்காலிகமாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக இரவு 11.20 மணி அளவில் ரெயில் தாம்பரம் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்