< Back
மாநில செய்திகள்
போதை மறுவாழ்வு மையத்தில் கத்தியால் குத்தி ஏ.சி. மெக்கானிக் தற்கொலை முயற்சி
சென்னை
மாநில செய்திகள்

போதை மறுவாழ்வு மையத்தில் கத்தியால் குத்தி ஏ.சி. மெக்கானிக் தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
15 May 2023 7:25 AM IST

போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து தன்னை வீட்டுக்கு செல்ல அனுமதிக்காததால் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற ஏ.சி. மெக்கானிக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஏ.சி. மெக்கானிக்

ஆவடியை அடுத்த சேக்காடு, சிந்து நகரில் பிரபுதாஸ் என்பவருக்கு சொந்தமான போதை மறுவாழ்வு மையம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஏற்கனவே 2 முறை தங்கி சிகிச்சை பெற்று வந்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் அசோக்குமார் (வயது 42) என்பவர் கடந்த வாரம் மீண்டும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு போதை மறுவாழ்வு ஊழியர்களிடம் தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என அசோக்குமார் கூறினார். அதற்கு ஊழியர்கள் மறுத்தனர். அங்கேயே தங்கி சிகிச்சை பெறும்படி கூறினர்.

தற்கொலை முயற்சி

இதனால் விரக்தி அடைந்த அசோக்குமார், உணவு சாப்பிட சொல்வதுபோல் சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து தனக்கு தானே வயிற்றில் சரமாரியாக குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதை பார்த்த ஊழியர் சரவணன் என்பவர் ஓடிச்சென்று அசோக்குமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அசோக்குமார் தன்னைத்தானே வயிற்றில் கத்தியால் குத்திக்கொள்ளும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுபற்றி ஆவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்