< Back
மாநில செய்திகள்
சென்னையில் கடந்த 6 மாதங்களில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சுமார் ரூ.23.25 கோடி அபராதம் வசூல்
மாநில செய்திகள்

சென்னையில் கடந்த 6 மாதங்களில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சுமார் ரூ.23.25 கோடி அபராதம் வசூல்

தினத்தந்தி
|
17 Oct 2022 3:53 PM IST

சென்னையில் கடந்த 6 மாதங்களில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சுமார் ரூ.23.25 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், கடந்த 6 மாதங்களில் ரூ.23.25 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை கடந்த 2018-ம் ஆண்டு முதல் நேரடியாக பணம் வசூலிக்கும் முறையை முழுவதுமாக ரத்து செய்து வங்கிப் பணப்பரிவர்த்தனை மூலமாக மட்டுமே அபராதம் செலுத்தும் முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆனால் வாகன ஓட்டிகள் அபராதத்தை சரியான நேரத்தில் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இந்த நிலையில் இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் புதிய நடைமுறையை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தொடங்கியது. அதன்படி 12 அழைப்பு மையங்களை தொடங்கி, நேரடியாக விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளை தொடர்பு கொண்டு அபராதத் தொகை விவரங்கள் மற்றும் அபராதம் செலுத்தவில்லையென்றால் வழக்குகள் கோர்ட்டுக்கு அனுப்பப்படும் என்பதைக்கூறி அபராதத்தொகை வசூலில் ஈடுபட்டனர்.

அதனடிப்படையில் 3,86,886 பழைய வழக்குகளில் ரூ.7,65,35,160 அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. மேலும் புதிதாக பதிவான 5,31,687 வழக்குகளில் ரூ.15,59,75,421 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பழைய வழக்குகள் புதிய வழக்குகள் என கடந்த 6 மாதங்களில் மொத்தமாக 9,18,573 வழக்குகளில் ரூ.23,25,10,581 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன்மூலமாக மட்டுமே ரூ.6 கோடிக்கும் மேலாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்