திருவாரூர்
விபத்தில்லா தீபாவளி குறித்து தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
|விபத்தில்லா தீபாவளி குறித்து தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து திருவாரூர் தீயணைப்பு துறையினர் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தீத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அதன்படி திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீபாவளியன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும் தீ விபத்து ஏற்பட்டால், அதனை உடனடியாக அணைப்பது, தீ விபத்து ஏற்படும் இடங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பது குறித்தும், விபத்தின் போது காயமடைந்தவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் செல்வது, முதலுதவி சிகிச்சை அளிப்பது, மழைக்காலங்களில் ஏற்படும் பேரிடர்களில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் பல்கலைகழக பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.