செங்கல்பட்டு
கிருஷ்ணா நதிநீர் வரத்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் 90 சதவீதம் தண்ணீர்
|கிருஷ்ணா நதிநீர் வரத்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் 7.810 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 66 சதவீதம் ஆகும்.
கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த மாதம் 8-ந்தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 575 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணா நதி நீர் வரத்தை கருத்தில் கொண்டும், பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்கவும், பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இதனால் தற்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இந்த 2 ஏரிகளிலும் நீர் இருப்பு 90 சதவீதம் உள்ளது. இதனால் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது.
சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதாலும், கிருஷ்ணா நதிநீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாலும் இந்த ஆண்டு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டி.எம்.சி. இதில் 3.058 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 92.6 சதவீதம் ஆகும். ஏரிக்கு வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி.எம்.சி. இதில் 3.276 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 90 சதவீதம் ஆகும். ஏரிக்கு 460 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 206 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரியில் இருந்து சோழவரம் ஏரிக்கு தண்ணீர் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சோழவரம் ஏரியில் தற்போது தண்ணீர் முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 1.081 டி.எம்.சி. இதில் வெறும் 131 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. இதில் 924 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 595 கன அடி வீதம் சென்று கொண்டிருக்கிறது. இங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 821 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.