பாப்பாரப்பட்டி அருகே கருக்கலைப்பு முயற்சி - பெண் செவிலியர் கைது
|தர்மபுரியில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறும் நபர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் ஆண்-பெண் பாலின விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த நிலையில் கருவில் பாலினம் கண்டறிந்து தெரிவிக்கும் சட்டவிரோத செயலை தடுக்க மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவுறுத்தலின் பேரில் சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கர்ப்பிணிகளின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிந்து தெரிவித்த கும்பலை பரிகம், நெக்குந்தி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் மருத்துவத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து தெரிவிக்கும் கும்பலில் உள்ள கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் (வயது 45), சின்னராஜ் (29) தர்மபுரி இலக்கியம்பட்டியைச் சேர்ந்த கற்பகம் (39) ஆகிய 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தர்மபுரி மாவட்டத்தில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறும் நபர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கர்ப்பிணி பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய முயன்ற பெண் செவிலியரை போலீசார் கைது செய்தனர். மருத்துவர்களே கருக்கலைப்பு செய்ய அஞ்சும் போது செவிலியரான உனக்கு என்ன தெரியும் என மாவட்ட கலெக்டர் சாந்தி சரமாரி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கருக்கலைப்பு விவகாரத்தில் செவிலியர் கைது செய்யப்பட்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.