< Back
மாநில செய்திகள்
கரியாலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது, சாராய வியாபாரிகளுடன் தொடர்பு; சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கரியாலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது, சாராய வியாபாரிகளுடன் தொடர்பு; சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

தினத்தந்தி
|
14 Jun 2023 12:15 AM IST

கரியாலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றியபோது சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சாராய வியாபாரிகளுடன் தொடர்பு

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலை கரியாலூரில் இயங்கி வரும் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம். இவர் சாராய வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் சென்றது. அதன் அடிப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கத்தை கடந்த வாரம் கள்ளக்குறிச்சி-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு வாகனம் எண் 2-க்கு பணியிட மாற்றம் செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார்.

மேலும் ராமலிங்கம் சாராய வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துள்ளாரா? என துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

பணியிடை நீக்கம்

அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் சாராய வியாபாரிகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும், செல்போன் மூலமும் தொடர்பு வைத்திருந்தது உறுதியானது. இதையடுத்து நெடுஞ்சாலை பிரிவு ரோந்து வாகனத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா மற்றும் சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் தொடர்பில் இருந்து காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காவல் துறையினர் ஈடுபட்டாலோ அல்லது துணைபோனாலோ அவர்கள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்