ராமநாதபுரம்
ரூ.32 லட்சத்துடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்பட 3 பேர் சிக்கினர்
|ராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.32 லட்சத்துடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்பட 3 பேர் சிக்கினார்.
ராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.32 லட்சத்துடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்பட 3 பேர் சிக்கினார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் அரசு டிரைவர்களுக்கான வாகனம் நிறுத்துமிடம் மற்றும் மாடியில் ஓய்வறை உள்ளது. இந்த பகுதியில் சிலரிடம் லட்சக்கணக்கில் கட்டு கட்டாக பணம் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் குமரேசன் உள்ளிட்டோர் அங்கு சென்று மறைந்திருந்து தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது அங்கு ஜீப்பில் இருந்து இறங்கிய 3 பேர் கைப்பை ஒன்றை தூக்கிக்கொண்டு சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த கைப்பையை சோதனை செய்தனர். அதில் ரூ.500, ரூ.2 ஆயிரம் என கட்டுக்கட்டாக பணம் இருந்தது. மொத்தம் ரூ.32 லட்சம் இருந்தது.
ரூ.32 லட்சம் பறிமுதல்
இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்த போது ராமநாதபுரம் பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு பிரிவு செயற்பொறியாளர் கண்ணன் (வயது 59), தொழில்நுட்ப வரைவாளர் குமரேசன் (49), ஜீப் டிரைவர் முனியசாமி (50) என்பது தெரியவந்தது. இவர்களிடம் அந்த பணத்திற்கான கணக்கு விவரங்களை கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவர்கள் 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கணக்கில் காட்டப்படாத ரூ.32 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்பட 3 பேர் ரூ.32 லட்சத்துடன் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.