< Back
மாநில செய்திகள்
மேக்சி கேப் வாகனங்களுக்கான ஆயுட்கால வரியை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
மாநில செய்திகள்

மேக்சி கேப் வாகனங்களுக்கான ஆயுட்கால வரியை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
8 Dec 2023 12:54 AM IST

பழைய வாகனங்களுக்கு ஆயுட்கால வரி செலுத்த வேண்டுமென்று கூறுவது ஏற்புடையதல்ல என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

கொரோனா பெருந்தொற்று மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட தொழில் மோட்டார் வாகனத் தொழில் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிலையில், அரசின் வருமானத்தைப் பெருக்க வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு கசப்பு மருந்துகளை மக்களுக்கு அளித்த தி.மு.க. அரசு, அண்மையில் மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரியை உயர்த்தி மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரியை உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்ட போதே அதனை ரத்து செய்ய வலியுறுத்தி நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். இருப்பினும், வரி உயர்விற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு, வரி உயர்விற்கான ஆணையை தி.மு.க. அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி, புதிய வாகனங்களுக்கான வரி உயர்த்தப்பட்டதோடு மட்டுமல்லாமல், பழைய வாகனங்களுக்கான காலாண்டு வரி ஆயுள் வரியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதனை நிறுத்தி வைக்குமாறு சுற்றுலா, டாக்சி உரிமையாளர் கூட்டமைப்பினர் உட்பட இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய வாகனம் வாங்க இயலாத காரணத்தால், பழைய வாகனத்தை வைத்துக் கொண்டு அதில் வருகின்ற வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்ற நிலையில், அந்தப் பழைய வாகனங்களுக்கு ஆயுட்கால வரி செலுத்த வேண்டுமென்று கூறுவது ஏற்புடையதல்ல. ஏற்கெனவே பல ஆண்டுகளாக காலாண்டு வரி செலுத்தி வருகின்றவர்களை திடீரென்று ஆயுட்கால வரி செலுத்த வேண்டுமென்று சொல்வது அவர்களை தொழிலை விட்டுச் செல் என்று சொல்வதற்கு சமம். வாகன உரிமையாளர்கள் மிகப் பெரிய நிதிச் சுமைக்கு ஆளாக்கப்படுவார்கள்.

எனவே, பழைய வாகனங்களின் தற்போதைய விலை மற்றும் ஏற்கெனவே அவர்கள் கட்டிய வரி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதற்கேற்ப வரியை நிர்ணயம் செய்ய வேண்டுமென்றும், இதற்காக ஒரு குழுவினை அமைத்து, வாகன உரிமையாளர்களின் கருத்தினைக் கேட்டு, அதன்படி முடிவெடுக்க வேண்டுமென்றும், அதுவரை ஆயுட்கால வரியை நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்