< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான திரவியங்களால் அபிஷேகம்

தினத்தந்தி
|
26 Oct 2023 2:45 AM IST

மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ராஜராஜ சோழன் சதய விழா

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் முடி சூட்டிய நாளை அவர் பிறந்த ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு 1,038-வது சதய விழா நேற்று முன்தினம் மங்கள இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கருத்தரங்கம், 1038 கலைஞர்கள் பங்கு பெற்ற பரதநாட்டியம், கவியரங்கம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை

நேற்று 2-வதுநாள் நிகழ்ச்சி மங்கள இசையுடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணிக்கு சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் புத்தாடைகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறை நூலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து யானை மீது வைத்து நான்கு ராஜ வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது சிவ பூத இசை வாத்தியங்களை இசைத்தபடி சிவனடியார்கள் வந்தனர். அவர்களுக்கு பின்னால் பெரியகோவிலின் மாதிரி தோற்றம் லாரியில் வைத்து எடுத்து வரப்பட்டது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 48 ஓதுவார்கள் தேவாரம் பாடியபடி வந்தனர்.

48 வகையான திரவியங்களால் அபிஷேகம்

அதன் பின்னர் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு திரவியபொடி, மஞ்சள் பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், சந்தனம், விபூதி, வில்வம், தைலக்காப்பு, சாம்பிராணி தைலம், வாசனைப்பொடி, இளநீர் உள்ளிட்ட 48 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சிறப்பு அலங்காரம்

முன்னதாக குஜராத்தில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்ட ராஜராஜ சோழன்-லோகமாதேவி சிலைகள் முன்பு புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் செய்தனர். அப்போது ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளுக்கு ராஜா-ராணி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

இரவு ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடந்தது. மேலும் பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மேலும் செய்திகள்