< Back
மாநில செய்திகள்
வீட்டில் தனியாக  இருந்த மாணவியை ஏமாற்றி ரூ.2½ லட்சம் நகை அபேஸ்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மாணவியை ஏமாற்றி ரூ.2½ லட்சம் நகை அபேஸ்

தினத்தந்தி
|
7 Aug 2023 12:15 AM IST

தியாகதுருகம் அருகே வீட்டில் தனியாக இருந்த மாணவியை ஏமாற்றி ரூ.2½ லட்சம் நகையை அபேஸ் செய்துவிட்டு சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே மாடூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). துபாயில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (35). இவர்களுக்கு தேவதர்ஷினி (11) என்கிற மகள் உள்ளார். இவள் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் தேன்மொழி நேற்று முன்தினம் அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற ஏரி சீரமைப்பு பணிக்கு சென்றார். இதனால் தேவதர்ஷினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற மர்மநபர் ஒருவர், தேவதர்ஷினியிடம், உனது அம்மா தேன்மொழி வீட்டு பீரோவில் முக்கியமான பேப்பர் ஒன்றை வைத்துள்ளாராம். அதனை எடுத்து வருமாறு என்னை அனுப்பி வைத்துள்ளார்.

எனவே வீட்டில் உள்ள பீரோவின் சாவியை எடுத்து கொடு. நான் அந்த பேப்பரை எடுத்து உன் அம்மாவிடம் கொண்டு கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய தேவதர்ஷினி, வீட்டில் இருந்த பீரோ சாவியை எடுத்து அந்த மர்மநபரிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிய மர்மநபர், பீரோவை திறந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர், தேவதர்ஷினியிடம் உனது அம்மா கூறிய பேப்பரை எடுத்துவிட்டேன். அதனை உன் அம்மாவிடம் கொண்டு சென்று கொடுத்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த நிலையில் தேன்மொழி வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவரிடம், வீட்டில் நடந்த சம்பவம் குறித்து தேவதர்ஷினி கூறியுள்ளார்.

வலைவீச்சு

இதில் பதறிய அவர், உடனே பீரோவை பார்த்தார். அப்போதுதான் மர்மநபர், பேப்பரை எடுப்பதுபோல் தேவதர்ஷினியிடம் நடித்து, அங்கிருந்த 5¾ பவுன் நகையை அபேஸ் செய்துவிட்டு சென்றது தேன்மொழிக்கு தெரிந்தது. அபேஸ் போன நகையின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். சிறுமியை ஏமாற்றி நகையை மர்மநபர் அபேஸ் செய்துவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்