< Back
மாநில செய்திகள்
அப்பா பைத்தியம் சாமி கோவில் கும்பாபிஷேகம்
சேலம்
மாநில செய்திகள்

அப்பா பைத்தியம் சாமி கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
7 Sep 2022 8:00 PM GMT

சேலம் சூரமங்கலத்தில் அப்பா பைத்தியம் சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்றார்.

சேலம் சூரமங்கலத்தில் அப்பா பைத்தியம் சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்றார்.

அப்பா பைத்தியம் சாமி கோவில்

சேலம் சூரமங்கலத்தில் அப்பா பைத்தியம் சாமி தனது 141-வது வயதில் ஜீவசமாதி அடைந்தார். அவரது நினைவாக சூரமங்கலத்தில் கோவில் கட்டப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

காலை சற்குருவுக்கு 108 திரவிய வழிபாடுகள் நடத்தப்பட்டன. பின்னர் திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து அப்பா பைத்தியம் சாமி கோவில் கோபுர கலசத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவப்பட்டது. பின்னர் புனித நீர் ஊற்றப்பட்டு கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் மீது மலர் தூவப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது.

புதுச்சேரி முதல்-அமைச்சர்

இந்த கும்பாபிஷேக விழாவில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கும்பாபிஷேக விழாவிற்கு வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. விழாவின் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் அருள் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, தெற்கு தாசில்தார் தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சற்குரு அப்பா பைத்தியம் சாமி கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்