< Back
மாநில செய்திகள்
உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுக - வழக்கறிஞர்களுக்கு ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்.
மாநில செய்திகள்

உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுக - வழக்கறிஞர்களுக்கு ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்.

தினத்தந்தி
|
5 March 2024 1:53 PM IST

சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ்மொழியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளார். மேலும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி முன்னிலையிலேயே தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, முதல்-அமைச்சர், மு.க.ஸ்டாலின் தன்னுடைய உரையிலேயே 'தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும' என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, தி.மு.க.வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 16-வது பக்கத்தில் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்" என்ற தலைப்பில் "இந்தி அல்லது மாநில மொழிகள் உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளிலும் ஆணைகளிலும் பயன்படுத்தப்படலாம்" என அலுவலக மொழிகள் சட்டம், 1963 பிரிவு 7-ல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக மாநில சட்டப் பேரவை தீர்மானம் இயற்றி, அது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டால், ஜனாதிபதி அந்த தீர்மானத்தை ஏற்று உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அலுவலக மொழிச் சட்டம் தெளிவாகக் கூறியுள்ளது. இதற்கேற்ப, கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் தமிழை நீதிமன்ற மொழியாக்கிட வேண்டும் என்ற தீர்மானத்தை 6-12-2006 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியது.

தொடர்ந்து, கவர்னரின் பரிந்துரையுடன் இத்தீர்மானம் 11-2-2007 அன்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், தமிழை நீதிமன்ற மொழியாக ஆக்கிடும் தீர்மானத்தை, மத்திய அரசு உடனடியாக ஏற்று ஆணை பிறப்பிக்க கழகம் தொடர்ந்து வலியுறுத்தும் என வாக்குறுதி அளித்திருப்பதோடு, தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

எனவே, தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள் தங்கள் உண்ணாவிரத அறப்போராட்டத்தை கைவிடக்கோரி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்